சனி, 1 பிப்ரவரி, 2020

எது காதல்? ‍-அத்தியாயம் 2

2
கோதைக்கு மனமே சரியில்லை. பள்ளி ஆண்டுகாலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அடுத்த ஆண்டு குமார் வேறு பள்ளிக்கு ஒன்றாம் படிவம் படிக்கச் சென்றுவிடுவான். பெரும் இழப்பு நேரப்போவது போல் அவள் மனம் கனத்திருந்தது. அடுத்தாண்டு மாற்றலாகிப் போகவிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் பிரியாவிடை விருந்து வைப்பது வழக்கம். கோதை, கோகிலா, வசந்தி, கார்த்திகா ஆகிய நால்வரும் நடனப்பிரிவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். தனக்குப் பிடித்தமான மின்னல் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊ லலலா' பாடலை கோதை தேர்வு செய்திருந்தாள். மற்றவர்களும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தனர். பாடலுக்குப் பொருத்தமான அபிநயங்களைக் கோதையே நிர்ணயித்து மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தாள். நடனத்தில் அவளுக்கிருக்கும் திறமை அப்பள்ளியில் யாவரும் அறிந்ததே. ஆகையால் பொறுப்பாசிரியர் கூட முழுப்பொறுப்பையும் கோதையிடமே கொடுத்துவிட்டார். பள்ளி முடிந்து சில வேளையில் கோதையும் அவளது தோழிகளும் வகுப்பறையில் நடனப்பயிற்சி மேற்கொண்டனர். இந்த விடயம் குமாரின் காதுக்கும் எட்டியது.

ஒருநாள் பள்ளி ஓய்வு வேளையின் போது குமார் அவளைக் கடந்துச் செல்ல நேர்ந்தது. அவன் பக்கத்தில் இருந்த சரண். "என்ன? எங்களுக்காக நடனமெல்லாம் ஏற்பாடு செய்கிறாயாமே?" என்று கேலி செய்தான். "உங்களுக்காக தனியாக இங்கே யாரும் மனக்கெடவில்லை. இது ஒட்டுமொத்த ஆறாம் ஆண்டுக்காகச் செய்கிறோமாக்கும்," என்று சிலுப்பிக்கொண்டுச் சென்றாள். தான் நடனம் புரியப்போவது குமாருக்குத் தெரிந்துவிட்டது. நிச்சயமாக அவன் பிரியாவிடைக்கு வருவான். அவனுக்காக எப்பொழுதையும் விட நடனத்தைச் சிறப்பாக ஆடவேண்டும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.

நாட்கள் ஓடின. பிரியாவிடைக்கொடுக்கும் நாளும் வந்துச் சேர்ந்தது. கோதையும் அவளது தோழிகளும் அழகாக உடுத்தி நடனத்திற்குத் தயாராகினர். கோதை தன் மனதைப் பாடல் வரிகளுக்குள் ஒன்றிணைத்து அருமையாக ஆடினாள். அவள் ஆடுவதை முன்வரிசையில் நின்று இமைக்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் குமார். 'என் கண்ணு ரொம்ப அழகா? என் இறக்கை ரொம்ப அழகா?' என்ற வரிகளின் போது கோது குமாரைப் பார்த்து அபிநயம் பிடித்தாள்.குமார் வெட்கப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. சரண் குமாரின் இடுப்பில் இடித்து ஏதோ அவன் காதுக்கருகில் முணுமுணுத்ததை நடனத்தின் போதும் கவனிக்க கோதை தவறவில்லை.

ஒருவழியாகப் பிரியாவிடை விருந்து முடிந்தது. அனைத்தையும் சுத்தப்படுத்திவிட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் வீடு செல்ல தயாராகினர். கோதையும் கோகிலாவும் உடை மாற்றி பேருந்து நிற்குமிடத்திற்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு முன்பாக மிதிவண்டியில் குமாரும் சரணும் காத்திருந்தனர். அவர்களைக் கண்டதுமே கோதைக்கு மனம் படபடத்தது. அவர்கள் ஏன் இங்கே நிற்கிறார்கள்? ஒருவேளை தனக்காகத்தான் நிற்கிறார்களா? இப்போது என்ன செய்வது. இங்கே எல்லார் முன்னிலையும் அவர்களோடு பேசுவது சரியாகப் படாதே. யாராவது இதைப் பார்த்து வீட்டில் சொல்லிவிட்டால் என்ன செய்வது என பலவாறாக எண்ணத் தொடங்கினாள். அவளையறிமால் அவள் கால்கள் நடுங்கின.
"ஏய், அங்கே பார்! குமாரும் சரணும் உனக்காகத்தான் அங்கே நிற்கிறார்கள் போல் தெரிகிறது," என்றாள் கோகிலா.

"தெரியாத மாதிரி வா. நாம் அவர்களைக் கவனிக்காத மாதிரி வேறு பக்கத்தில் நின்றுக்கொள்வோம்," என்று கோகிலாவின் கைகளை இறுக்கமாகப் பற்றி, அவர்களைக் கண்டுக்கொள்ளாமல் வெகு வேகுமாய் நடந்தாள் கோதை. அவர்கள் கடந்துப்போகையில் சரண் அவர்களைப் பார்த்து, "ஹாய்" என்றான். அதற்கும் பதிலேதும் கூறாமல் சரேலென்று எதிர்திசையில் சென்று அமர்ந்துக்கொண்டனர் கோகிலாவும், கோதையும்.
அந்தப்பள்ளியின் பேருந்து நிற்குமிடம் மிக முக்கிய சாலையின் அருகில் இருக்கிறது. சாலையில் வருவோர் போவோர் எவர் வேண்டிலும் அங்குப் பேருந்திற்காகக் காத்திருக்கும் மாணவர்களைத் தூரத்திலிருந்தே காண முடியும். அந்தச் சிரிய பட்டிணத்தில் பெரும்பாலும் அனைவருமே ஒருவர் குடும்பத்தை மற்றவர் அறிந்து வைத்திருந்தனர். 'உம்பிள்ளையைப் பள்ளியில் பார்த்தேன், யாரோ இரண்டுப் பையன்களோட பேசிக்கிட்டிருந்தா,' என்று யாராவ‌து வீட்டில் சொன்னால் நிலமை என்னாகும்? அந்தத் தொண்ணூறுகளின் காலக்கட்டத்தின் அவ்வாறு பேசுவதே எவ்வளவுத் தவறாக எண்ணப்பட்டது? இதுதான் கோதையின் பதட்டத்திற்குக் காரணம். இதை குமாரும் தெரிந்துவைத்துதானே இருப்பான். சில நிமிடங்கள் அங்கேயே மிதிவண்டியோடு நின்றுக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் இருவரும் அவ்விடத்தைவிட்டு அகன்றனர். குமாரின் முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று மறையாமல் ஒட்டிக்கொண்டிருந்தது. அது, பதட்ட நிலையிலும் கோதையின் மனதிற்கு ஆறுதலாய் இருந்தது.

இன்னும் ஒரு வாரம்தான் எஞ்சியிருக்கிறது. பள்ளி ஆண்டுகாலம் முடிந்துவிடும். குமாரும் சரணும் தொலைவிலுள்ள இடைநிலைப்பள்ளிக்குச் சென்றுவிடுவர். இனி அவர்களை, குறிப்பாக குமாரை எப்போது
பார்ப்பது? தானும் ஆரம்பக்கல்வியை முடித்துவிட்டு அதே இடைநிலைப்பள்ளிக்குச் சென்றால் காணலாம். ஆனால், அதற்கு ஒரு வருடம் பொறுக்க வேண்டுமே. காலங்கள் உருண்டோடக் கூடாதா என ஏங்கினாள் கோதை. அவளுக்கு அவனைக் காண வேண்டும். ஒவ்வொரு நாளும் காண வேண்டும். ஆனால் அதனை யாரிடம் எப்படி விவரிப்பது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. இவையணைத்தும் அவள் மனதை பாரமாய் அமுக்கிக்கொண்டிருந்தது. சில சமயம் இவற்றை நினைக்கையில் அவளுக்கு அழுகை கூட வந்தது. யாரோ ஒருவன். அவனிடம் சரியாகப் பேசியது கூட இல்லை. அவனைப் பிரியப்போகிறோம் என்று நினைக்கையில் மனதுக்கு ஏன் இத்துணைச் சிரமமாய் இருக்கிறது? அவளுக்கு அவளையே புரிந்துக்கொள்ள இயலவில்லை.

"நீ அவனைக் காதலிக்கிறியா?" கோகிலா வாய் திறந்துக் கேட்டேவிட்டாள்.

"எனக்குத் தெரியல," என்ற பதிலை மட்டுமே கோதையால் தர முடிந்தது. 

அந்தக் கடைசி வாரத்தில் குமாரின் முகத்திலும் சோகத்தின் சாயல் படர ஆரம்பித்தது. அவளைக் கண்டபோதெல்லாம் அவன் புன்னகைக்கவே செய்தான். அந்தப் புன்னகையின் பின்னால் பெரும் சோகம் ஒளிந்திருப்பது போல் கோதையின் மனதிற்குப் பட்டது. ஒரேவேளை இந்தப் பிரிவை எண்ணி அவனும் அவளைப் போலவே மனம் கலங்குகின்றானோ? அந்தக் கடைசி வாரமும் வந்து முடிந்தது. அப்போதும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அந்த ஆண்டு இறுதி விடுமுறையை காதல் பாடலிலும், சோகப் பாடலிலும் நிரப்பினாள் கோதை. அடுத்தாண்டு ஆறாம் ஆண்டிற்கான‌ தேர்வு நடைப்பெறும். அதில் நல்லமதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி மனதினுள் வந்துப் போனது. அதற்காக அவள் தன்னைத் தயார்படுத்தவும் செய்தாள். இடையிடையே தலைத்தூக்கிய குமாரின் நினைவுகளை வலிந்து அப்புறப்படுத்தினாள். 

விடுமுறை முடிந்துப் பள்ளித் தொடங்கியது. மீண்டும் தங்கள் நண்பர்களைக் காணும் ஆர்வம் அனைத்து மாணவர்களுக்குள்ளும் இருந்தது. கோதையும் குமாரின் நினைவுகளிலிருந்து விடுப்பட்டு ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றாள். அவளின் ஆறாம் ஆண்டு இனிதே தொடங்கியது. அவளும் வழமை போல் பாடத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினாள். இரண்டாவது வாரம் வழக்கம் போல் அவளும் கோகிலாவும் பள்ளிப்பேருந்திற்காகக் காத்துநின்ற வேளையில் இரண்டு மிதிவண்டிகள் அவ்விடம் வந்துச் சேர்ந்தன. இடைநிலைப்பள்ளிச் சீருடையிலிருந்த குமார் தயக்கத்துடனும் புன்னகையுடனும் கோதையின் அருகில் மிதிவண்டியை நிறுத்தினாள். அவளால் அவள் கண்களை நம்ப முடியவில்லை. இவன் எப்படி இங்கு? இடைநிலைப்பள்ளி இருப்பதோ வெகு தொலைவில். குமாரின் வீடும் இங்கு இல்லை. இவன் எதற்கு எப்படி இங்கே அன்று குழம்பியவாறு அவனை நோக்கினாள். அவன் முகத்தைக் கண்ட மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனிபோல் உருகினாள் கோதை. கோகிலா அவளை மெதுவாக இடிக்க, அப்போதுதான் தான் பேருந்து நிற்குமிடத்தில் இருக்கிறோம் என்ற சுயநினைவிற்கு வந்தாள். ஏனோ, ஆயிரம் கண்கள் தன்னைப் பார்ப்து போல் அவளுக்கு மனம் குறுகுறுத்தது. 

தான் ஏதாவது வினையில் சிக்கிக்கொள்வதற்கு முன் அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட வேண்டும் என எண்ணியவளாய், கோகிலாவின் கரத்தைப் பற்றக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தாள்.

"கோதை, நில்லு!" சொன்னது குமார். 

அவன் அவ்வாறு அழைத்தது அவளுக்கு என்னவோ செய்தது. அவன் அவளை அழைக்கிறான். அவள் பெயர் சொல்லி அழைக்கிறான். ஏதோ உரிமைக்குரலுடன் அழைக்கிறான். இந்த அழைப்பை எப்படி மீறுவது? அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தாள். அதில் ஏக்காம் குடிக்கொண்டிருந்தது.

"யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்," என்றாள் கோதை. 

அவளுக்கு வேறு என்ன சொல்வது அல்லது செய்வது என்றுத் தெரியவில்லை. இவன் முகத்தைக் காணத்தானே அவள் தவமாய் தவமிருந்தாள். இவனிடம் என்னென்னவோ பேச வேண்டும் என்றுதானே காத்திருந்தாள். இந்த சிரிப்பைக் காண்பதற்காக எவ்வளவு ஏங்கினாள். ஆனால், அவளால் அங்கு நின்றுப் பேசத்தான் முடியவில்லை.

"கவலைப்படாதே, நான் சென்றுவிடுவேன். உன்னைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதனால்தான் வந்தேன். உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்," என்றான் குமார். அதில் சோகம் படிந்திருந்ததை அவள் உணர்ந்தாள். அவன் அவளுக்காக, அவளைக் காண வேண்டும் என்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறானே. அப்படியானால், அவனுக்கும் தன் மீது அன்பிருக்கத்தானே செய்கிறது. நான் அவனை நினைத்திருந்தது போல் அவன் என்னை நினைத்திருக்கிறான் என்பதுதானே அர்த்தம்? அவள் மனம் இளகியது. அவளையறிமால் அவள் கண்களில் நீர் வழிந்தது.

"ஏய், ஏன் அழுகின்றாய்? அழாதே கோதை. நான் சென்றுவிடுகிறேன். உனக்குச் சிரமம் அளித்திருந்தால் என்னை மன்னித்துவிடு," என்றவாறு மிதிவண்டியை வந்த திசை நோக்கி மிதித்தான் குமார். அவள் அருகில் வந்த சரண், "எப்போதும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் இம்சை தாங்காமல் நான் தான் அழைத்து வந்தேன். பாவம், அவன் உன் நினைவாகவே இருக்கிறான். இனி நாங்கள் வரமாட்டோம்," என்றவாறு சென்றுவிட்டான்.

"ஏன் அழுகிறாய்?" என்று கோகிலா கேட்டாள்.

"தெரியவில்லை," என்றாள் கோதை. அவள் மனம் வலித்தது. ஏனென்று அவளுக்கு விளங்கவில்லை. அவள் அவனைக் காதலிக்கிறாளா? ஐயோ, இது வீட்டில் தெரிந்தால் என்னவாகும்? அடுத்து சில தினங்கள் அவள் சோகமே உருவாய் இருந்தாள். அவள் தாய் என்னவென்று கேட்டும் வெறும் களைப்பு என்று மழுப்பினாள். தன்னைத் தேடி வந்த ஒருவனைப் புண்படுத்தி அனுப்பிவிட்டோமோ என்று மனம் நொந்தாள். இனி அவன் தன்னை நினைக்க மாட்டானா என்று வருந்தினாள். இவ்வளவு மனப்போராட்டதிற்கு நடுவிலும் அவள் படிப்பில் கவனம் சிதறவில்லை. மனம் திசை மாறும் போதெல்லாம் அவள் புது நூல்கள் வாசித்தாள். ஒருவாறாக அவ்வாண்டை எப்படியோ கடந்து தேர்வும் எழுதிச் சிறப்பு மதிப்பெண்களும் பெற்றுவிட்டாள்.

அடுத்தாண்டு அவளும் இடைநிலைப்பள்ளிக்கு செல்லவிருக்கிறாள். குமார் படிக்கும் அதே இடைநிலைப்பள்ளி. அவளை அவனுக்கு நினைவிருக்குமா? அல்லது மற்ற இடைநிலைப்பள்ளி மாணவர்கள் போல் இந்நேரம் அவனுக்கும் காதலி இருக்குமா? மீண்டும் குமாரைப் பற்றிய எண்ணம் அவளும் படையெடுத்தது.

வியாழன், 30 ஜனவரி, 2020

வாழ்!

இவன் சரியில்லை அவன் சரியில்லை
இது சரியில்லை அது சரியில்லை
இப்படியே புறம் பேசு
இடுகாட்டில் போய் சேரு!

என்னதான் வேண்டும்
எதற்குத்தான் பிறந்தாய்
எப்படியோ வளர்ந்தாய்
எப்படியும் இறப்பாய்…

வாழும் காலத்திலே
வளத்தோடு வாழலாமே
வாயை மூடிக்கொண்டு
வீட்டை நாம் பார்க்கலாமே?

அடித்தவன் கதையெல்லாம்
அடிப்பினிலே போட்டுவிடு
அண்டிப்பிழைப்பதை நீ
அடியோடு விட்டுவிடு!

நேற்றிருந்தார் இன்றில்லை
இன்றிருப்போர் நாளையில்லை
நாழிகையைக் கடத்தாமல்
இந்நாளை வாழ்ந்துவிடு!

எது காதல்? -அத்தியாயம் 1

1
அந்தப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டுப் பயின்று வரும் கோதையும் கோகிலாவும் பள்ளி முடிந்து அன்றைக்கு வீட்டுக்குச் செல்லவில்லை. புதன்கிழமைதோறும் மதிய வேளையில் புறப்பாட நடவடிக்கைகள் இருப்பதால் அவர்கள் வீடு செல்லாமல் பள்ளியிலேயே தங்கிவிட்டனர்.பள்ளிக்குத் தொலைவில் வசித்துவரும் மாணவர்கள் மதிய வகுப்பின் போது இவ்வாறு பள்ளியிலேயே தங்கிவிடுவது வழக்கம். வீடு அருகில் உள்ள மாணவர்கள் வீட்டிற்குச் சென்று மதியம் மீண்டும் பள்ளி திரும்புவர். இது பெரும்பாலான பள்ளிகளில் வழமை.

அப்போது 'மின்னல்' என்ற தமிழ்ப்படம் வெளிவந்து வெற்றிநடைப்போட்டுக்கொண்டிருந்த வேளை. கோகிலாவும் கோதையும் மதிய வகுப்பு தொடங்குமுன் இருக்கும் நேரத்தைச் செலவிட அந்தச் சிறிய பள்ளியை சுற்றி சுற்றி நடந்துக்கொண்டே கதைப்பேசி வந்தனர். அப்போது, "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா?" என்ற பாடல்வரிகளை யாரோ ஆண் குரல் பாட, "விளையாட ஜோடி தேவை" என்று கோதை தொடர்ந்தாள். இயற்கையிலேயே சற்று குறும்புத்தனம் மிக்கவள்.

"ஏய்! யாரது எங்கள் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுவது" என்று குரலுக்குச் சொந்தக்காரர்களான குமாரும், சரணும் குரல் வந்த திசையை நோக்கி ஓடி வந்தனர். குமார், சரண் இருவரும் ஆறாம் ஆண்டுப் படிக்கும் பன்னிரெண்டு வயது மாணவர்கள். கோதையும் கோகிலாவும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள். பிள்ளைப் பருவத்திலிருந்து இளம் பருவத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் காலம்.

குமாரும் சரணும் வரும் காலடிச் சத்தம் கேட்கவே, கோகிலாவும் கோதையும் சிரித்துக்கொண்டே தலைத்தெறிக்க ஓடினர். அவர்கள் அங்கிருந்து ஓடுவதைப் பார்த்த குமாரும் சரணும், "ஏய்! ரெண்டு பேரும் நில்லுங்கள்" என்று கூவியவாறு துரத்திக்கொண்டு வந்தனர். தோழிகள் இருவரும் ஓர் அறையின் வளைவில் ஓடிச்சென்ற வேளையில் எங்கிருந்தோ வந்த பள்ளியாசிரியரைக் கண்ட குமாரும் சரணும் சட்டெனெ நின்றனர்.

"என்ன ஒரே ஓட்டம்?" என்று வினவினார் நாராயணன்.

"ஒன்னுமில்லை சார்... சும்மா விளையாடிக்கொண்டிருந்தோம்" என்று மழுப்பினான் சரண்.

"சரி, இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். சில நோட்டுப்புத்தகங்களைக் காரிலிருந்து எடுத்து வர வேண்டும்," என்று அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார் நாராயணன் என்ற கணக்காசிரியர்.

அவர்கள் போவதை வகுப்பறையின் வளைவிலிருந்து மறைந்து நின்று கோதையும் கோகிலாவும் பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரின் முகத்திலும் சிரிப்பு. கோதையின் மனம் என்றைக்கும் விட அப்போது அதிகம் படபடத்தது. ஏதோ ஒருவித கிளர்ச்சி, இனம் புரியாத இன்பம்.

"நல்லவேளை அவனுங்க நம்மள பிடிக்கல," என்றாள் கோகிலா.

அதற்கு பதிலொன்றும் கூறாமல் புன்னகையுடன் தலையசைத்தாள் கோதை.
ஒருவேளை பிடித்திருந்தால்? என்று எண்ணியபோது அவளையும் அறியாமல் அவள் கன்னம் சிவந்தது.

குமார் பாடிய அந்தப் பாடல் அவளுக்கு மிகவும் பிடித்த சமீபத்திய பாடல், எனவே தான் அதைக் கேட்டதும் அவளும் தொடர்ந்துப் பாடினாள். அதே வேளை தனக்குப் பிடித்த பாடலை இன்னொருவனும் இரசித்துப் பாடுகின்றானே என்று நினைத்த மாத்திரத்தில் அவளுள் எதுவோ, என்னவோ செய்தது. அவன் பெயர் அவளுக்குத் தெரியும். அந்தப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான‌வர்களை அவளுக்குத் தெரியும். ஆனால் அன்றுதான் முதன் முதலில் அவன் பெயரை நினைத்த மாத்திரத்தில் அவளையறியாமல் அவள் இதழ்கள் புன்னகைத்தன.

"என்ன சிரிப்பு ஒரு மாதிரியா இருக்கு?" என்று வினவினாள் கோகிலா.

"ஒன்னுமில்லை..."

"ஏய், மழுப்பாதே. அவர் பாடுவாராம்; இவங்க சேர்ந்துப் பாடுவாங்களாம். அவர் துரத்துவாராம்; இவங்க ஓடுவாங்களாம். யாருக்கிட்ட?" என்று கிண்டலடித்தாள் கோகிலா. கோதையில் இளமைப் பருவத்தின் மிக முக்கியப் புள்ளியிட்டது அன்று கோகிலாதான். கோதை சிரித்தாள். அவளால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.

மதிய வகுப்பின் போது கோதையால் முழுமையாக எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை. இது அவளுக்குப் புதுமையாய் இருந்தது. குமாரையும் அவன் பாடிய பாடலையும் நினைத்த மாத்திரத்தில் அவள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி படபடத்தது. வீட்டிற்குச் சென்ற கோதை "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலைத் திரும்ப திரும்பக் கேட்டாள். ஒவ்வோர் வரியையும் இரசித்துக்கேட்டாள். ஒவ்வோர் முறையும் முதன் முறை கேட்பதைப் போலவே அந்தப் பாடல் அவளுக்கு சிலிர்ப்பூட்டியது.

இடையிடையே குமாரின் குரல் அவள் காதுக்கு மட்டும் ஒலித்து மறைந்தது.
அதன்பின் ஒவ்வொரு முறை அவள் குமாரை பள்ளியில் சந்திக்க நேர்ந்த பொழுது ஓரக்கண்ணால் நோட்டமிடுவாள். குமார் எப்போதும் நண்பர்கள் சூழ இருந்தான். சரண் அவனை நிழல்போல் தொடர்ந்தான். கோதையும் குமாரும் பல முறை ஒருவரையொருவர் பள்ளியில் பல சந்தர்ப்பங்களில் சந்திக்க நேர்ந்த போதிலும் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சில சமயம் நண்பர்கள் காணாத வேளையில் குமார் அவளைப் பார்த்துப் புன்னகைப்பான். அவளுக்கு அப்போது வெட்கம் பிடுங்கித்தின்னும். சட்டென்று பார்வையை வேறு திசைக்குத் திருப்பிவிடுவாள். சில சமயம் இவள் அவனைப் பார்த்துப் புன்னகைப்பாள், அவன் முகத்தில் வெட்கம் படர சிரித்தவாறு , நண்பர்கள் கவனியா வண்ணம் முக‌த்தைத் திருப்பிக் கொள்வான். இப்படியே நாட்கள் கடந்தன. அவர்கள் இருவரின் வாய் பேசாவிடினும், கண்களாலேயே அவர்கள் ஆயிரம் கதைகள் பேசினர்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்ற கோதை ஒரு முறையாவது அவனைக் கண்டுவிடமாட்டோமா என்று ஏங்கினாள். அவள் ஏக்கத்தைப் புரிந்துக்கொண்டவன் போல் குமார் அடிக்கடி அவளது வகுப்பறையைக் கடந்துப் போனான். அவன் வரும்போதும், போகும் போதும் ஓரக்கண்ணால் அவளை நோட்டமிட்டான். இதனைக் கோதையின் இணைப்பிரியா தோழி கோகிலாவும் கவனிக்கத் தவறவில்லை.

"என்ன? உன் ரோமியோ அடிக்கடி இந்தப் பக்கம் வரமாதிரி இருக்கு?" என்று கிண்டலடித்தாள்.

"யாரு?" என்று ஒன்றும் தெரியாதது போல் வினவிளாள் கோதை.

"நடிக்காத. எனக்கு எல்லாம் தெரியும். நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். அவர் ஓரக்கண்ணுல பார்க்கிறதும் நீ சிரிக்கிறதும்.

"சிரிச்சா தப்பா?"

"சிரிச்சா தப்பில்ல. ஆனால், நீ சிரிக்கிற விதமே வேற மாதிரி இருக்கு. அங்க பார்வையும் வேற மாதிரி வருது."

கோதை பதில் சொல்லவில்லை. என்னவென்று சொல்வது? அதற்குள் வகுப்பாசிரியர் அறைக்குள் நுழைய அவர்கள் பேச்சு அத்தோடு நின்றது. இந்தப் பேச்சி அடியோடு நின்றது என்று சொல்வதற்கில்லை. கோதையும் குமாரும் சிரிப்பையும் பார்வையையும் பரிமாறிக்கொள்வதை அவர்களின் நண்பர்களும் நாளடைவில் கவனிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்க நேரிடும் போதோ அல்லது ஒருவரை ஒருவர் கடந்துப் போகும் போது அவர்களுடைய‌ நண்பர்கள் தொண்டையைக் கணைத்து அர்த்தப் புன்னகை வீசுவர். அவர்களின் நட்பும் அன்பும் அந்த அளவிலேயே வளர்ந்தது எனலாம். அவர்கள் இருவருக்கும் அப்பருவத்தில் அதுவே தேவையாய் இருந்தது, ஆயிரம் அர்த்தம் தரக்கூடிய அந்தப் பார்வையும், உலகையே ஒரு கணம் மறக்கச்செய்யும் அந்தப் புன்னகையும் மட்டுமே.

அவர்கள் இருவரின் மனதிலும் வேறு எதுவும் இல்லை. அவளின் முகம் அவனுக்கும், அவனின் எண்ணம் மட்டுமே அவளுக்கும் போதுமானதாய் இருந்தது. பதினொன்று வயது சிறுமிக்கும், பன்னிரெண்டு வயது சிறுவனுக்கும் அந்த தொன்னூறுகளில் வேறு என்னதான் எண்ணத் தெரியும். அப்பழுக்கற்ற அவர்கள் இதயத்தில் தூய அன்பொன்று அழகாய் வேறூன்றத் தொடங்கியது.






புதன், 2 ஜனவரி, 2019

தீட்டு!


தீட்டென்று ஏதுமில்லை
தாரகத்தின் எல்லைக்குள்ளே
என்னைப் படைத்தவனே
உன்னையும் படைத்தான்
பாலுறுப்பு வெவ்வேறு கொடுத்தான்!

உதிரம் உதிர்வதனால்
உட்கார வைத்தார்கள்
வயிற்றுவலி வந்ததினால்
வீட்டோடு வைத்தார்கள்!
மூன்றுநாள் மூலையிலே
முடக்கி வைத்ததினால்
மூளையற்ற மூடர்கள்
தீட்டென்றுச்  சொன்னார்கள்

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மன்னித்துவிடு மகனே



No automatic alt text available.
தாய்மையற்ற எனக்கு
தலைமகனாய் வந்தவனே
நான்குகால் நாய்மகனே
நல்லுள்ளம் கொண்டவனே...

குட்டியாய் நீ இருந்தாய்
குதூகலம் எனக்களித்தாய்
எத்தனை இன்பம் கண்டோம்
அன்பிலே திளைத்திருந்தோம்

வாழ்க்கையை வாழ நினைத்து
வீட்டை நான் விட்டு வந்தேன்
வருத்தம் கொண்ட போதும்
வந்திடுவாய் என நினைத்தேன்

ஏமாந்துவிட்டேன் மகனே
உன்னை நான் இழந்துவிட்டேன்
பழிவாங்கும் இழிபிறவி
பிரித்துவிட்டான் நம்மையடா

ஏதுமில்லையடா எனக்கு
நீயின்றி உயிரும் போகுதடா மகனே
கோபம் வருகிறது, மனது வலிக்கிறது
கொஞ்சம் குரைத்து உன் வருகையைச் சொல்லிவிடு

என்றாவது நீ வருவாய்
என்று நான் காத்திருந்தேன்
அனைத்தும் கனவாக‌
அலைக்கடலில் கரைகிறதே!

உன் கண்களைக் காணாது
என் கண்கள் கலங்குகிறது
உன் காதுகளைத் தடவ வேண்டும்
உரசி அமர்ந்துவிடு

மடிமீது துயில்வாயே
மழலைப்போல் பார்ப்பாயே
கருவர்ண கண்ணா நீ
கருணைக்கொள் எந்தன் மீது!

செல்லக்குட்டி ரோக்கி
என் அம்முக்குட்டி ரோக்கி
நீயில்லா வாழ்க்கை
நீரில்லா உலகமடா

மனிதனின் கொடூர புத்திக்கு
நம் உறவு பலியாகிவிட்டது
நீ எனக்கு வேண்டுமடா
உன்னை நான் பிரியவில்லை

உன்னை நினைக்காத நாளில்லை
கலங்காத இரவில்லை
வந்துவிடு செல்லக்குட்டி
என்னைச் சேர்ந்துவிடு ரோக்கி குட்டி!

அம்மா அழைக்கிறேன்
வந்துவிட்டு ரோக்கி குட்டி
பாய்ந்தோடி வாடா செல்லம்
சென்றிடுவோம் தூரமாக!

உன்னை நான் நீங்கவில்லை
நீ என்னிடமிருந்து பிரிக்கப்பட்டாய்
இன்னமும் போராடுகிறேன்
உன்னை மீட்டெடுக்க..

யாருமில்லையடா இங்கெனக்கு
பழிச்சொல் தவிர வேறேதும் இல்லையா
உனக்குத் தெரியாதா என் அன்பு உண்மையென்று
நானின்றி நீ எப்படியடா இருக்கிறாய்?

நான் என்ன செய்ய சொல் மகனே?
குறுக்குப்புத்தி எனக்கு இல்லை
எவரையும் துன்புறுத்தும் எண்ணமில்லை
எட்டிச் செல்வதனால், எட்டி மிதிக்கின்றனரே?

காசு பணம் வேண்டாமடா
நீ மட்டும் போதுமென்றேன்
பலவீனம் தெரிந்ததனால்
பிரித்தனரோ நம்மை இன்று?

ரோக்கி...
கேட்கிறதா ரோக்கி?
அம்மாவின் குரலைத் தேடுகிறாயா?
என்னைக் காணாது ஏமாந்துப் போனாயா?

இந்த வாழ்க்கைச் சூதாட்டத்தில்
உன்னை இழந்துவிட்டேனே ரோக்கி
என் முதல் குழந்தையடா நீ
நீயின்றி எப்படி வாழ்வேன்?

உறக்கம் பிடிக்கவில்லை ரோக்கி
உயிர்பிரியும் வலி உணர்கிறேன்
அனைத்தையும் பிரிந்த எனக்கு நீதானே ஆறுதல்?
அம்மா செல்லம் ரோக்கி, ஓடி வா ரோக்கி!

என் செல்லமே  வாடா செல்லம்
அம்மா இங்கு இருக்கிறேன்
அழுதாயா என்னைத் தேடி
அழைத்தாயா நடு இரவில்?

யாருக்கும் புரியவில்லை
நாய்தானே என்கின்றனர்
அவர்களுக்கு என்ன தெரியும்?
இந்த நாய்க்கு நான் தாய் என்று?

கெஞ்சிக் கதறினேன் மகனே
நீ எனக்கு வேண்டுமென்று
வசைச்சொல் பொறுத்தேன்
வலிகளைத் தாங்கினேன்

ஏதும் பலிக்கவில்லையடா
நம் அன்பு ஜெயிக்கவில்லையடா
என்னை மன்னித்துவிடு ரோக்கி
அம்மாவை மன்னித்துவிடு!

நான் உன்னை புரக்கணிக்கவில்லை
ஐயகோ, அப்படி மட்டும் எண்ணிவிடாதே
நீ என்னிடமிருந்துப் பறிக்கப்பட்டாய்
வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டாய்

என்னை வெறுத்துவிடாதே ரோக்கி
இப்படி ஏதேனும் நிகழும் என்ற அச்சத்தால்
பெக்கியை உனக்குத் துணையாக்கினேன்
உன்னை நான் தனிமையில் விடமாட்டேன்!

என்னை நினைக்கின்றாயா ரோக்கி?
என் நினைவு இருக்கின்றதா?
மறந்துவிடு மகனே
மகிழ்வாய் இருந்துவிடு மகனே

இந்தத் துன்பம் என்னோடு போகட்டும்
என்னை நினையாதே
நினைத்து உருகும் வாழ்க்கை உனக்கு வேண்டா
நீ நன்றாய் வாழ வேண்டும்!

தூக்கி தூக்கி வளர்த்தேனடா
துயில்வதைக் கூட இரசித்தேனடா
வாஞ்சையில்லா உன் அன்பு
வஞ்சனைக்கொண்ட மனிதர்க்குப் புரிவதில்லை

எப்படி புரியவைப்பேன் உனக்கு?
என்னை மன்னித்துவிடு ரோக்கி
பாதியில் விட்டுச்சென்ற என்னை
மன்னித்துவிடு மகனே...


இது வேறு உலகம்!

பிராவுன்ஸ்பீல்ட், டெக்சாஸ்

மகிழுந்து நீண்ட நேரம் மனித நடமாடமற்ற அந்தச் சாலையில் மிக மெதுவாக நகர்ந்தது. காட்டு மிருகங்கள், குறிப்பாக மான்கள் அதிகம் நடமாடும் இடம் என்பதால் குறிப்பிட்ட வேகத்திற்கும் குறைவாகவே மகிழுந்தைச் செலுத்த வேண்டியதாயிற்று.

உங்கள் இடம் வந்தாயிற்று என ஜி.பி.எஸ். அலறவும் நான் சுற்றும் முற்றும் பார்த்து விழித்தேன். இந்தக் காட்டுக்குள்ளா வீடு இருக்கிறது?  ஆம், சுற்றும் முற்றும் மனித நடமாடமற்ற காட்டிற்குள்தான் வீடு. அது ஒரு தனி வீடு. பெரிய நிலம், சுற்றிலும் மரம், செடி கொடிகள் தாறுமாறாக வளர்ந்திருந்தது. பிரம்மாண்டமான பலகை வீடு. வீட்டிற்குள் நவீனத்தின் அறிகுறியாக குளிர்ச்சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அதே சமயம், அவர்கள் வேட்டையாடிய மிருகங்களின் தலைகள் பாடம் செய்யப்பட்டு, வீட்டின் சுவர்களை அலகங்கரித்தன. வீட்டின் வடிவமைப்புத் தவிர, நவீன வீட்டிற்கான அத்தனை வசதிகளும் அந்தப் பலகை வீட்டில் செய்யப்பட்டிருந்தன.

வீட்டின் பின்புறம், சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல். ஊஞ்சல், சறுக்கு மரம், கூடைப்பந்து விளையாடும் என அடிப்படை விளையாட்டு வசதிகள் இருந்தன. இன்னொரு பக்கம் சிறு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அவ்விடம் ஓய்வாக அமர்ந்துப் பேச நாற்காலி, மேசைகள், மின்விசிறி போன்றவை வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தாண்டி நீச்சல் குளம். சிறுவர்கள் நீந்தி விளையாட, பெரியவர்கள் கூடாரத்தில் அமர்த்துக் கதைத்துக்கொண்டிருந்தோம்.

மாலை மங்கி இரவு வந்தது. அந்த வானத்தில்தான் எத்தனை நட்சத்திரங்கள்? பட்டணத்து வானத்தில் இல்லாத நட்சத்திரங்கள் அனைத்தும் யாருமற்ற இந்தக் காட்டில் வந்து ஒளிந்துக் கொண்டனவையா? சற்று தூரத்தின் சிறு அரவம். மான்கள் இரண்டு தங்கள் இரவு உணவை வேலியின் ஓரமாகக் கொறித்துக்கொண்டிருந்தன. என்ன ஒரு அருமையான காட்சி! எங்களுக்கு இரவு உணவாக கோழி, மான் இறைச்சி, சோளம் ஆகியவை வழங்கப்பட்டன. அனைவரும் இரவை இரசித்தபடி கூடாரத்திலேயே உணவை ருசித்தோம்.

அவர்களிடமிருந்து விடைபெறும் முன், வீட்டையொட்டிய கொட்டகையைப் பார்வையிட்டோம். சிறியவையிலிருந்து, பெரியவை வரையிலான, பலவகைத் துப்பாக்கிகள் அவ்விடம் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதன் செயல்பாடுகளைக் காட்டுவதற்காக அதன் மீது ஒலி உறிஞ்சியைப் பொருத்தி, வானின் மீது ஒருமுறை சுட்டுக்காட்டினார்கள். சத்தமே வரவில்லை. இதனைக்கொண்டுதான் விலங்குகளை வேட்டையாடுவார்கள், இன்னமும்.

இப்படியானவொரு வாழ்வை சில படங்களில் கண்டுள்ளேன். அதனையே நேரில் பார்க்கும் போது என்னையும் மறந்து வியந்து நின்றேன். இது வேறு உலகம்!

ஞாயிறு, 11 ஜூன், 2017

முதிர்ச்சி (All Grown up) -Jami Attenberg


Image result for all grown up novel

ஆண்ரியா 40 வயதைத் தொடும் திருமணமாகாதப் பெண். அவள் தனது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என தீர்மானிக்கவில்லை. சமூகம் விதித்த கட்டுப்பாடுகளைக் கண்டுக்கொள்ளவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் வேறுபாடுகளை மதிக்கவில்லை. அவள் மனம் போன போக்கில் வாழ்கிறாள். தனிமை அவளை வாட்டுகிறது, ஆனால் அவள் தனது வாழ்க்கையை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்பவில்லை. தான் விரும்பும் ஆணுடன் உறவுக்கொள்கிறாள். வேண்டிய நேரத்தில் போதையின் உதவியை நாடுகிறாள். தான் வளர்ந்துவிட்டபடியால் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தி தனக்கிருப்பதை உணர்கிறாள். இருப்பினும், அவளுக்கு அது பிடிக்கவில்லை. இந்த வளர்ச்சி அவளை ஏதோ செய்கிறது. மனதளவில் தான் இன்னும் வளரவில்லை என்ற உண்மை அவளுக்குப் புரிகிறது.

தனது அண்ணன் மகள் ஊனமுடன் பிறந்து, வளர்ச்சியின்றி இறப்பதைப் பார்க்கிறாள். தன் தந்தை அளவுக்கதிமான போதையில் இறப்பதைப் பார்க்கிறாள். தான் விரும்பிய ஆண், வாழ்க்கையைப் பற்றி கவலைக்கொள்ளாமல் ஏழ்மையில் தவிப்பதைப் பார்க்கிறாள். தன் தாய் வாழ்க்கையை வாழ பிற ஆண்களின் தயவை வேண்டி நிற்பதைப் பார்க்கிறாள். திருமணமான தனது தோழி, விவாகரத்துக் கேட்டு நிற்பதைப் பார்க்கிறாள். இந்த வாழ்க்கை அனைவருக்கும் ஏதோ ஒரு சிரமத்தை, தடையை விதித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்ரியாவுக்கு இது பிடிக்கவில்லை. இந்த வளர்ச்சியை அவள் விரும்பவில்லை. இருப்பினும், அவளின் அனுமதியின்றி அவள் வளர்ந்துவிட்டாள். எனவே, இந்த வாழ்க்கையை அவள் வாழ வேண்டும்; அவள் போக்கில்...

பெரும்பான்மையான அமெரிக்கப் பெண்களின் வாழ்க்கை முறையும், அவர்கள் சிந்திக்கும் விதமும், வாழ்க்கையை அவர்கள் எதிர்க்கொள்ளும் வழியும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதை சற்று விரக்தியாகவே நகர்கிறது. வளர்ந்துவிட்டவர்களின் வாழ்க்கையே விரக்தி நிறைந்தது தானே? வளர்ச்சியும், வயதின் முதிர்ச்சியும் ஒருவரை எப்படியெல்லாம் மாற்றுகிறது, சிந்திக்க வைக்கிறது என்பதை விளக்க நாவலாசிரியர் ஜாமி அத்தென்பெர்க்ஸ் முயன்றுள்ளார்.